பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் 40 சதவீதம் கடைகள் மூடப்பட்டன

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 சதவீதம் கடைகள் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் 40 சதவீதம் கடைகள் மூடப்பட்டன
Published on

கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் மாநில எல்லையான ஓசூருடன் நிறுத்தப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த முழு அடைப்புக்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.

அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி நகரில் நேற்று வழக்கமாக நகைக்கடை மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. இதைத் தவிர ஜவுளி கடைகள், ஆட்டோ மொபைல்ஸ் கடைகள், வாகன பழுது பார்ப்பு கடைகள் மூடப்பட்டிருந்தன. அதே போல தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி நகரில் மருந்து கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடின.

அதே நேரத்தில் கிருஷ்ணகிரி நகரில் ஆட்டோக்கள் பெரும்பாலானவை ஓடவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் நடந்தது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, ஏகாம்பவாணன், ஜேசு துரைராஜ், நாராயண மூர்த்தி, முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா, சிறுபான்மை தலைவர் ஷபீர் அகமத், ஆஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பா.ஜனதா அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஓசூரில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேதாஜி ரோடு, காந்தி ரோட்டில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதைத்தவிர தாலுகா அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை சாலைகளில் ஒரு சில கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கியது. பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன.

அதே போல கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்படும் கர்நாடக மாநில அரசு பஸ்களும், அத்திப்பள்ளியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் ஓசூர் ஜூஜூவாடி அருகில் இருந்து அத்திப்பள்ளி வரையில் நடந்து சென்றார்கள். இதன் காரணமாக பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். பஸ்கள் ஓடாததால் பெங்களூருவுக்கு பணி நிமித்தமாக செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஓசூர் காந்தி சிலை அருகில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, நகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் தி.மு.க.வினர், ஓசூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் ராமச்சந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காந்தி சிலை அருகில் சாலை மறியல் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நீங்கலாக பெரும் பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com