பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் பிச்சை எடுத்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் பிச்சை எடுத்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் பா.ம.க.சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் கதிர்ராசரத்தினம், சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர், மக்களிடம் பிச்சை எடுத்து வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதை வலியுறுத்தும் வகையில் கைகளில் தட்டுகளை ஏந்தியவாறு பிச்சை எடுத்து, கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷமிட்டனர். இதில், பா.ம.க.மாநில மாணவர் அணி செயலாளர் வக்கீல் விஜயராசா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஓமலூர் ஒன்றிய செயலாளர் அம்மாசி மற்றும் நிர்வாகிகள் சதாசிவம், மாதவி, புயல்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. மக்களிடம் பிச்சை எடுத்து பெட்ரோல், டீசல் வாங்கும் சூழ்நிலை வந்துவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் நாங்கள் கைகளில் தட்டுகளை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பா.ம.க. சார்பில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com