

ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக கலெக்டரை சந்தித்து கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்கள் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மனு வழங்க ஏதுவாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுச்சென்றனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதன் காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று திங்கட்கிழமை என்பதால் 10 மாதங்களுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்கள் விவரம் குறித்து பதிவு செய்த பின்னர் அரசு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
வீட்டு மனைப்பட்டா
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பர்கூர் மலை கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒரே வீட்டில் குடியிருக்க முடியாமல் பூர்வீக வீட்டை வெளியேறி வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம்.
அனைவரும் கூலி தொழிலாளர்கள் என்பதால் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு பர்கூர் மலை கிராமத்திலேயே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.