புதுவையில் போலீஸ் பணிக்கு நவம்பர் 4-ந்தேதி உடல் தகுதி தேர்வு

புதுவையில் போலீஸ் வேலையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வு நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது.
புதுவையில் போலீஸ் பணிக்கு நவம்பர் 4-ந்தேதி உடல் தகுதி தேர்வு
Published on

புதுச்சேரி,

புதுவை காவல்துறையில் 431 போலீசாரை புதிதாக நியமிக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வயது தளர்வு பிரச்சினை காரணமாக இந்த தேர்வுகள் 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பித்த 16 ஆயிரத்து 335 பேரில் 13 ஆயிரத்து 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ரேடியோ டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பித்த 254 பேரில் 229 பேரின் விண்ணப்பங்களும் டெக் கேண்ட்லர் (ரோந்து படகுகளை இயக்குபவர்) பதவிக்கு விண்ணப்பித்த 636 பேரில் 588 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு அடுத்த (நவம்பர்) மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 3-ந்தேதி வரை இந்த தேர்வுகள் நடக்கின்றன. உடல் தகுதிக்காக ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அனுமதி சீட்டுகள்

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டவர்களுக்கான அனுமதி சீட்டுகளை https://re-c-ru-it-m-ent.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உடல் தகுதி தேர்வு நடக்கும் இடம், நேரம் போன்றவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் உள்ள இடங்களை மாற்ற விரும்பினால் நவம்பர் 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். அவை உரிய அதிகாரம் பெற்றவரால் பரிசீலிக்கப்படும்.

அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினைகள் இருந்தால் 0413-2231317 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். தேர்வுகள் புதுவையின் 4 பிராந்தியங்களிலும் நடைபெறும்.

எழுத்து தேர்வு

தேர்வுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வரவேண்டும். உடல் தகுதி தேர்வில் வெற்றிபெறுபவர்கள் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ரேடியோ டெக்னீஷியன், ரோந்து படகுகளை இயக்குபவர் ஆகியோருக்கான எழுத்து தேர்வுகள் டிசம்பர் 19-ந்தேதியும், காவலர் பணிக்கான தேர்வு டிசம்பர் 20-ந்தேதியும் நடைபெறும். எழுத்து தேர்வுகள் புதுவையின் 4 பிராந்தியங்களிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com