திருச்சி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

மகாளய அமாவாசையையொட்டி திருச்சி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்சி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
Published on

ஸ்ரீரங்கம்,

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசையாகும். தை, ஆடி மாதங்களில் வரக்கூடிய அமாவாசையை விட மகாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்ததாகும். முன்னோருக்கு தை, ஆடி அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது உண்டு.

இந்த நாளில் முன்னோரை நினைத்து வழிபாடு செய்தால் பிதுர்தோஷம் முற்றிலும் நீங்கி புண்ணியம் அடைவார்கள் என்பதும், முன்னோரின் ஆசியும் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இதனால் புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது உண்டு.

காவிரியில் தண்ணீர்

அதன்படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருச்சி காவிரி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் தற்போது இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. கடந்த ஆடி மாத அமாவாசையின்போது காவிரி ஆறு வறண்டு கிடந்தது. ஓடை போல ஆற்றின் நடுப்பகுதியில் தண்ணீர் ஓடியது. இதனால் ஆற்றின் நடுப்பகுதி வரை பக்தர்கள் நடந்து சென்று புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

புனித நீராடல்

இந்த நிலையில் காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் அம்மா மண்டபம் படித்துறையில் பாதுகாப்பு வேலிகளை தாண்டி பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கரையோரம் பக்தர்கள் புனித நீராடினர். படித்துறையின் மேல்பகுதியில் புரோகிதர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

புரோகிதர்களிடம் முன்னோரின் பெயர், நட்சத்திரங்களை கூறியும், தேங்காய், பழம், காய்கறிகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்தும் தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்களை கூற, அதனை பின் தொடர்ந்து பக்தர்கள் கூறினர். பின்னர் பிண்டங்களை ஆற்றில் விட்டு முன்னோரை நினைத்து வழிபாடு நடத்தினர்.

நெரிசலில் சிக்கி தவித்தனர்

அம்மா மண்டபம் படித்துறையின் மேல்பகுதியில் புரோகிதர்கள் ஏராளமானோர் வரிசையாக அமர்ந்திருந்ததால் பக்தர்கள் நடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அம்மா மண்டபம் படித்துறையில் இட நெருக்கடி ஏற்பட்டது. நெரிசலில் பக்தர்கள் சிக்கித் தவித்தனர்.

இதேபோல் கருட மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, கீதாபுரம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் அதிகமாக குவிந்ததால் ஒரே நேரத்தில் பக்தர்கள் பலரை வரிசையாக அமர வைத்து புரோகிதர்கள் வேத மந்திரங்களை கூறி சடங்குகளை செய்தனர்.

பாதுகாப்பு

திருச்சி மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் சிலர் வீட்டிலேயே குளித்து விட்டு படித்துறைக்கு வந்திருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திரளான பக்தர்கள் குவிந்திருந்ததால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மகாளய அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்த பின் கரையோரம் இருந்த கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பசுவுக்கு அகத்தி கீரை கொடுத்தனர். ஆதரவற்றவர்களுக்கு சிலர் அன்னதானங்களை வழங்கினர். பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. திரளான பக்தர்கள் குவிந்ததால் மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com