

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 13). அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பரதன் என்பவரது மகள் கீர்த்திகா (14). இவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
தோழிகளான இவர்கள் 2 பேரும் மாலையில் வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இருவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் பல இடங்களில் தேடினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பண்ணைக்குட்டை அருகே செருப்புகள் கிடந்தன. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர் பண்ணைக்குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது மாணவிகள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிய வந்தது.
முத்துலெட்சுமி, கீர்த்திகாவின் உடல்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாணவிகள் பண்ணைக்குட்டையில் மூழ்கி இறந்ததை அடுத்து பிள்ளையார்நத்தம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.