விபத்து, அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த திட்டம்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விபத்து, அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த திட்டம்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு
Published on

திண்டுக்கல்,

நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி தினந்தோறும் பலர் உயிரிழக்கின்றனர். விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காததாலே பலி எண்ணிக்கை அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ்களில் ரத்த வங்கி, ஆக்சிஜன் சிலிண்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைகளில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்ள வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதையொட்டி, டாக்டர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று சிறப்பு குழுவை சேர்ந்த டாக்டர் கவுதம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் அங்கு நின்ற 108 ஆம்புலன்சில் உள்ள வசதிகள், அதனை நிறுத்தும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதையடுத்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்ற அதிகாரிகள் அங்குள்ள உபகரணங்களை சோதனை செய்தனர். மேலும், உடனடி சிகிச்சைக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை? என்பது குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com