கொரோனா வைரஸ் எதிரொலி கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை மூடப்பட்டன 31-ந்தேதி வரை அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தகவல்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னையில் பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை உள்ளிட்ட பூங்காக்கள் வரும் 31-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கொரோனா வைரஸ் எதிரொலி கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை மூடப்பட்டன 31-ந்தேதி வரை அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோட்டூர்புரத்தில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கம் நிர்வாகம், தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவை ஏற்று வரும் 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதியை ரத்து செய்து உள்ளது. இதனால் கோளரங்கம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு கோளரங்கத்தின் முகப்பு வாசலில் ஒட்டப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோளரங்க செயல் இயக்குனர் விஞ்ஞானி எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறும் போது:-

தற்போது கொரோனா வைரஸ் அச்சத்தால் கோளரங்கத்தில் அரசு உத்தரவுப்படி வரும் 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் கோளரங்கத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிண்டி சிறுவர் பூங்கா

கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 14 பாலூட்டி சிற்றினங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள், சிறுவர்கள் விளையாட வசதிகள் உள்ளன. இவற்றில் பொழுதை கழிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் தினசரி வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் இருப்பதால் பூங்காவை வரும் 31-ந்தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பூங்கா மூடப்பட்டு, அறிவிப்பு பலகையும் பூங்கா வாசலில் ஒட்டப்பட்டு உள்ளது.

இதன் அருகில் உள்ள பாம்பு பண்ணையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிர்வகித்து வரும் அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவும் வரும் 31-ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் பலர் வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

காந்தி மண்டபம்

கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த உத்தரவுகளையும் கிடைக்கப் பெறாதநிலையில் வழக்கம் போல் அடையாறில் உள்ள காந்தி மண்டபம் செயல்பட்டது. இங்கு சி.ராஜகோபாலச்சாரி, காமராஜர், எம்.பக்தவசலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. இங்கு பொதுவிழாக்கள் குறிப்பாக கலாசார உரையாடல்களும் இசை நிகழ்ச்சிகளும் நடந்து வரும். அத்துடன் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்காவாகவும் இம்மண்டபம் விளங்குகிறது. பொழுதை கழிக்க நூற்றுக்கணக்கானோர் இங்கு தினசரி வருவது வழக்கம்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அனைத்து பூங்காக்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் அடையாறில் உள்ள காந்தி மண்டபம் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்றும் சென்று பாடங்களை படிப்பது மற்றும் பொழுதை கழிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவன் மற்றும் வருமானவரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com