பெரம்பூரில் கொள்ளையடித்த 70 பவுன் நகையை வீட்டின் முன்பு வீசிச்சென்ற மர்மநபர்கள்

பெரம்பூரில், 70 பவுன் நகை கொள்ளைபோன வழக்கில், மோப்ப நாய் அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியதால் பயந்துபோன மர்மநபர்கள், அந்த திருட்டு நகையை மீண்டும் அவரது வீட்டு வாசலில் வீசிச்சென்றனர்.
பெரம்பூரில் கொள்ளையடித்த 70 பவுன் நகையை வீட்டின் முன்பு வீசிச்சென்ற மர்மநபர்கள்
Published on

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் செம்பியம் திம்மசாமி தர்கா தெருவைச் சேர்ந்தவர் இக்பால் (வயது 45). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இம்தியாஸ் (41). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக 3 மாடிகளை கொண்ட வீடு உள்ளது. இதில் இம்தியாஸ், முதல் மாடியில் தனியாக வசித்து வருகிறார். 2வது மாடி மற்றும் கீழ்த்தளத்தில் வேறு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

கடந்த 26ந்தேதி இம்தியாஸ், வீட்டை பூட்டிவிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கையை பார்க்க ராயபுரம் மருத்துவமனைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அலமாரியில் அட்டைப்பெட்டியில் வைத்திருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையில் போலீசார் அக்கம் பக்கத்தினர் மற்றும் இம்தியாஸ் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், அவர்களின் கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர். மேலும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் கொண்டு வரப்படும் என்று கூறிவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இம்தியாஸ் வீட்டின் வாசல் படிக்கட்டு அருகே துணியாலான பொட்டலம் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த இம்தியாஸ், அந்த துணி பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அதில் தனது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 70 பவுன் நகைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

இதுபற்றி செம்பியம் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த நகைகளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க மோப்ப நாய் கொண்டு வரப்படும் என போலீசார் கூறியதால் அந்த நகைகளை திருடியவர்கள் பயந்து போய், திருட்டு நகைகளை மட்டும் துணியில் பொதிந்து இம்தியாஸ் வீட்டின் அருகே படிக்கட்டில் வீசிச் சென்று உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்பதால் அது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com