

ஆன்லைன் விளையாட்டு
வில்லியனூர் வி.மணவெளி அன்னை தெரேசா நகர் தண்டுக்கரை வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன். கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷன் (வயது 16). சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய மாணவன் தர்ஷன் தனி அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டே காதில் ஹெட்போன் மாட்டியவாறு செல்போனில் ஆன்லைனில் பயர்வால் கேம் எனப்படும் துப்பாக்கி சுடுதல் விளையாடிக்கொண்டு இருந்தார்.
மயங்கி விழுந்து சாவு
மாலை சுமார் 4 மணியில் இருந்து தொடர்ந்து அவர் விளையாடியதாக தெரிகிறது. இரவு 8 மணி அளவில் தனது மகனை சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் ஜெய்சித்ரா அந்த அறைக்கு சென்றார்.
அப்போது சுயநினைவின்றி தர்ஷன் மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவர் தர்ஷனை மீட்டு அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தர்ஷனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் மாணவர் உயிரிழந்து இருப்பதை அறிந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
சோகத்தில் கிராமம்
இதுகுறித்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜிப்மரில் மாணவர் தர்ஷனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் இடைவிடாது 4 மணி நேரம் விளையாடிய நிலையில் பிளஸ்-2 மாணவர் திடீரென இறந்து போன சம்பவம் மணவெளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.