பள்ளிகளுக்கு பிளஸ்-1 வகுப்பு பாட புத்தகங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வழங்கப்படும்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ்-1 வகுப்பு பாட புத்தகங்கள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வழங்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறினார்.
பள்ளிகளுக்கு பிளஸ்-1 வகுப்பு பாட புத்தகங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வழங்கப்படும்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் அன்றே மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு விடும். பாட புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

புதிய பாட திட்டம்

இந்த ஆண்டு 1, 6, 9, மற்றும் பிளஸ்-1 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் பிளஸ்-1 வகுப்பு பாட புத்தகங்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை அச்சிடும் பணி இன்னும் முடியவில்லை. எனவே பிளஸ்-1 வகுப்பில் சில பாடபுத்தகங்களை மட்டும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து இ புக் ஆக தயாரித்து வழங்கப்பட உள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் வந்து சேரும் வரை இதனை வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

புதிய கல்வி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை கல்வி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளிகள் இடம் பெற்று உள்ளன. இதுவரை முசிறி கல்வி மாவட்டத்தில் இருந்த துறையூர் ஒன்றியம் தற்போது லால்குடி கல்வி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இனி வட்டார கல்வி அலுவலர்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

நடவடிக்கை

சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் இன்றி 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்குவதற்கான மாணவர் தேர்வு முடிந்து விட்டது. மொத்தம் எத்தனை மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது என்ற விவரம் பள்ளிகள் திறந்ததும் வெளியிடப்படும். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள் பள்ளிகளில் தரக்குறைவாக நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com