பிளஸ்-2 முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்க புதிய பாடத்திட்டம் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பிளஸ்-2 முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிளஸ்-2 முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்க புதிய பாடத்திட்டம் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Published on

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 78-ம் ஆண்டு விழா, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முஸ்லிம் கல்வி கமிட்டியின் செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் அப்துல் மஜீத் வரவேற்று பேசினார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல் படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாணவர்களின் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்வித்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விடுபட்ட பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும். இந்தியாவில் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்றவாறு கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியமாகிறது.

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். நீர் இல்லாமல் இந்த உலகம் வாழ முடியாது. அதனால் மரங்களை வளர்க்க ஊக்குவித்து வருகிறோம். மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் போடப்படும். 6 பாடத்துக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. பாடங்கள் யூ டியூப் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் கல்விக்கு என தனியாக புதிய தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படும். அதில் கல்வி, கலை, பண்பாடு, கலாசாரம், ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவை ஒளிப்பரப்பபடும். தொலைநோக்கு சிந்தனையுடன் பாடத்திட்டங்கள் அமைக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நெல்லை அல்வா, பனியாரம், பத்தமடை பாய், ஜெயலலிதா உருவம் பதித்த ஓவியம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

விழாவில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் பாலா, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப் ஜான், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் அ.திமு.க. அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், இணை செயலாளர் ரெட்டியார் பட்டி நாராயணன், நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை முன்னாள் செயலாளர் அரிகர சிவசங்கர், பள்ளி முதல்வர் ஜெசிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முஸ்லிம் கல்வி கமிட்டி உறுப்பினர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com