

கும்பகோணம்,
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 10-ந் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. நாளை (சனிக்கிழமை) வேதியியல் தேர்வு நடைபெற உள்ளது. இந்தநிலையில் கும்பகோணத்தில் நேற்று இரவு வேதியியல் வினாத்தாள் செல்போன் செயலியில் வெளியானதாக கூறப்படுகிறது. வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான மாணவர்கள் அந்த வினாத்தாளை பார்த்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இயற்பியல் வினாத்தாள் செல்போன் செயலியில் வெளியானதால், அந்த தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளதாக கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் எங்கிருந்து வினாத்தாள் வெளியானது? அதனை வெளியிட்டது யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. பிளஸ்-2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.