

தேனி:
செய்முறை தேர்வு
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக அரசு பொதுத்தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போல் ஆண்டும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்குமா? என்ற கேள்வி மாணவ, மாணவிகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில் திட்டமிட்டபடி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வுக்காக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு முக கவசம் அணிந்து வந்தனர்.
முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பள்ளியில் முககவசம் வழங்கப்பட்டது.
93 மையங்கள்
தேனி மாவட்டத்தில் 139 பள்ளிகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 93 மையங்களில் தேர்வு நடக்கிறது. மாணவ, மாணவிகளை 2 பிரிவாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது.
முதல் பிரிவு தேர்வு நேற்று தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு 46 மையங்களில் நடக்கிறது.
2-வது பிரிவு தேர்வு 47 மையங்களில் வருகிற 20-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
நேற்று தேர்வு நடந்த மையங்களுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் ஒரு தனி அறையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.
பின்பு சமூக இடைவெளியுடன் ஆய்வுக்கூடத்துக்கு சென்று தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.