2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Published on

துமகூரு,

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் வரும் மோடி எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். பகல் 2 மணிக்கு வரும் அவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துமகூரு செல்கிறார். அங்கு சித்தகங்கா மடத்திற்கு சென்று மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சமாதியில் மரியாதை செலுத்துகிறார்.

அதன் பிறகு அதே துமகூருவில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கிருஷி கர்மான் விருது வழங்கும் நிகழ்ச்சி (விவசாயிகள் மாநாடு) நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்று அந்த விழாவை தொடங்கி வைத்து முற்போக்கு விவசாயிகள் 28 பேருக்கு விருது வழங்குகிறார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மணிப்பூர், ஜார்கண்ட் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் உத்தரகாண்ட் மாநில கவர்னர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு திரும்புகிறார். அன்று மாலையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வருகிறார். அதன் பிறகு அன்று இரவு மோடி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் 3-ந் தேதி பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) அதிகாரிகள் மாநில போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் துமகூருவில் பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணியை ஆய்வு செய்த பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி பகல் 2.15 மணிக்கு துமகூரு சித்தகங்கா மடத்திற்கு வருகிறார். சிவக்குமார சுவாமியின் சமாதியில் அவர் மரியாதை செலுத்துகிறார். மாலை 5.30 மணி வரை பிரதமர் துமகூருவில் இருப்பார். கிருஷி கர்மான் விழாவிற்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பங்கேற்பவர்களின் வசதிக்காக அதிகளவில் ஒலிபெருக்கிகள், எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com