மந்திரி பதவிக்காக தேவேகவுடாவின் வீட்டுக்கு நடையாய் நடந்தேன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினால் என்ன தவறு ஜி.டி.தேவேகவுடா பேச்சால் மீண்டும் சர்ச்சை

மந்திரி பதவிக்காக தேவேகவுடாவின் வீட்டுக்கு நடையாய் நடந்தேன் என்றும், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினால் என்ன தவறு என்றும் முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார். அவருடைய பேச்சு மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மந்திரி பதவிக்காக தேவேகவுடாவின் வீட்டுக்கு நடையாய் நடந்தேன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினால் என்ன தவறு ஜி.டி.தேவேகவுடா பேச்சால் மீண்டும் சர்ச்சை
Published on

மைசூரு,

மைசூருவில் நேற்று முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டுக்கு கண்டிப்பாக வேண்டும் என்று நான் ஏற்கனவே ஒருமுறை கூறியிருந்தேன். அவர் நம் தேசத்தின் பாதுகாவலர். அவர்தான் நம் நாட்டை காப்பாற்றி வருகிறார். காஷ்மீர் பிரச்சினையில் அவர் எவ்வாறு ஒரு திடகாத்திரமான முடிவை எடுத்துள்ளார் என்பதே அதற்கு சாட்சி. அதை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவரைப் பற்றி நன்றாக பேசினால் உடனே நான் பா.ஜனதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி நமது நாட்டின் பாதுகாவலர், அவர் நம் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து வருகிறார். அதனால்தான் நான் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

இதேபோல் நான் எடியூரப்பாவை பற்றியும் புகழ்ந்து பேசி உள்ளேன். நான் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும், மந்திரி பதவியை பெறுவதற்காக தேவேகவுடாவின் வீட்டிற்கு சுமார் 1 மாதம் நடையாய் நடந்து அலைந்தேன்.

ஆனால் நான் சோகமாய் இருந்தபோது என்னை எடியூரப்பா அவருடைய வீட்டிற்கு அழைத்து வீட்டு வசதி வாரிய தலைவர் பதவியை நீங்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த பதவியையும் எனக்கு வழங்கி கவுரவித்தார். வீட்டு வசதி வாரிய தலைவராக இருந்த சோமண்ணாவுக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. இதற்காக நான் எடியூரப்பாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவருடைய நட்பை நான் என்றென்றும் போற்றுவேன். இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்மந்திரி எடியூரப்பாவையும், ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த ஜி.டி.தேவேகவுடா மீண்டும் புகழ்ந்து பேசியிருப்பது ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com