பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: தஞ்சை, கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

திருபுவனம் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை, கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: தஞ்சை, கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபு வனம் தூண்டில் வினாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ஒரு கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தரம் திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் உதவி போலீஸ் சூப்பிரண்டு சவுக்கத் அலி தலைமையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் வந்தனர்.

இந்த அதிகாரிகள், கடந்த 29-ந் தேதி திருவிடைமருதூர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டறிந்தனர். பின்னர் அங்குள்ள இன்ஸ்பெக்டர் வீட்டை தேசிய புலனாய்வு முகமை அலுவலகமாக மாற்றினர். அந்த அதிகாரிகளுக்கு உதவியாக ஏராளமான தமிழக போலீசார் குவிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் திருபுவனத்திற்கு சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களுடைய விசாரணையை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடியற்காலை 15 பேர் கொண்ட தனித்தனி குழுவினராக பிரிந்து சென்ற அதிகாரிகள், இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேரின் குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள், அவர்களது உறவினர்கள் வீடுகள் என கும்பகோணம் மேலக்காவிரி, திருமங்கலக்குடி, குறிச்சிமலை, திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர்.

அதோடு மட்டுமல்லாமல் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இவர்களுக்கு பாதுகாப்பாக இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட தமிழக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தஞ்சை-நாஞ்சிக்கோட்டை ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்திலும் நேற்று விசாரணை நடத்தினர். புலனாய்வுத்துறை அதிகாரி ஜஸ்வீர்சிங் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணையை நடத்தினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடைபெற்றது.

இதையொட்டி அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com