குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய செயலி

குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய செயலி
Published on

திண்டுக்கல்,

தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் குற்றவாளிகளை கண்காணிக்க தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு, அது பயன்பாட்டில் உள்ளது. இதில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவாகும் வழக்குகள், குற்றவாளிகளின் விவரங்கள், புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் ஒரு மாவட்டத்தில் நிகழ்ந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிற மாவட்ட போலீசாரும் அறிந்து கொள்ளலாம்.

அதேநேரம் சமீபகாலமாக வழிப்பறி கொள்ளையர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். எனினும், பல வழிப்பறி சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு போலீசாருக்கு சி.சி.டி.என்.எஸ். எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய செயலியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்காக அவர்களுடைய செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த செல்போனில் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும். மேலும் வாகன சோதனை அல்லது ரோந்து பணியில் ஈடுபடும் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் சந்தேக நபர்கள் சிக்கினால், அந்த செயலியை கொண்டு அந்த நபர் குற்றவாளியா? என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதற்காக சந்தேக நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒருசில நொடிகளில் தமிழகத்தில் எந்த ஊரில் அவர் மீது குற்ற வழக்குகள் இருந்தாலும் தெரிந்து விடும். அதேபோல் சந்தேக நபர்கள் ஓட்டி வரும் வாகனம் திருட்டு வாகனமா அல்லது குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனமா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வாகனத்தின் பதிவு எண்ணை செயலியில் குறிப்பிட்டால் சில நொடிகளில் முடிவு தெரிந்து விடும். இந்த செயலியை திண்டுக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதன்மூலம் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com