சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது
Published on

பெண்ணிடம் அத்துமீறல்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சிலர் குடும்பத்துடன், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்து பாசி மாலைகளை விற்பனை செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் சாதாரண உடையில் வந்த போலீஸ்காரர் ஒருவர் மது போதையில், நரிக்குறவ இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகவும், இதனை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் கணவரான கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உடனே, அங்கு இருந்த மக்கள் அந்த போலீஸ்காரரை பிடித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், அந்த போலீஸ்காரரை பஸ்சில் ஏற்றி சொந்த ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ்காரர் கைது

இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கரன்கோவில் அருகே சில்லிகுளத்தைச் சேர்ந்த முத்துபாண்டியன் மகன் ராமச்சந்திரன் (வயது 28) என்பவர் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. ராமச்சந்திரன், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றபோது, பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது.

இதையடுத்து ராமச்சந்திரன் மீது பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல் (இந்திய தண்டனை சட்டம் 294 (பி), தாக்குதல் (323) உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ராமச்சந்திரனை சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com