

களியக்காவிளை,
குமரி மாவட்டம் வழியாக பஸ், ரெயில்கள் மூலம் கேரளாவுக்கு கஞ்சா மற்றும் போதைபொருட்களை கடத்தும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக தமிழக-கேரள எல்லையில் கேரள மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒரு கேரள அரசு பஸ் சென்றது.
இந்த பஸ் தமிழக-கேரள எல்லையான அமரவிளை சோதனைச்சாவடி பகுதியில் சென்ற போது, அங்கு பணியில் இருந்த கேரள மதுவிலக்கு போலீசார் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பஸ்சில் இருந்த 2 இளைஞர்களின் பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தியது திருவனந்தபுரம் காரியாவட்டம் பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 24), பாங்கப்பாறை பகுதியை சேர்ந்த கரீஷ் (21) என்பது தெரியவந்தது. ராகுல் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கரீஷ் திருவனந்தபுரத்தில் புகைப்பட கலைஞராக உள்ளார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.