சென்னையில் குழந்தைகள் மறுவாழ்வு திட்டம் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னையில் குழந்தைகள் மறுவாழ்வுக்காக 15 நாட்கள் தொடர் அதிரடி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் குழந்தைகள் மறுவாழ்வு திட்டம் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள் போன்ற பலதரப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு, அந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் திட்டம் ஒன்று ஆபரேஷன் ஸ்மைல் என்ற பெயரில் வித்தியாசமான தொடர் நிகழ்ச்சியாக சென்னையில் பிப்ரவரி 15-ந் தேதி வரை 15 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆபரேஷன் ஸ்மைல் நிகழ்ச்சியில் சுமார் 260 அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் செயல்பாட்டில் ஈடுபடுவார்கள்.

சென்னை முழுவதும் இந்த நடவடிக்கை தொடரும். இதன் மூலம் மீட்கப்படும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுதான் இந்த ஆபரேஷன் ஸ்மைல் திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் நோடல் அதிகாரியாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கமிஷனர் தொடங்கி வைத்தார்

இந்த ஆபரேஷன் ஸ்மைல் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சீமாஅகர்வால், சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் லால்வீனா மற்றும் துணை கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் மீட்கப்படும் குழந்தைகள் சென்னை கெல்லீஸ், பரங்கிமலை மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் செயல்படும் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள். மீட்கப்படும் குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு தேவைப்படும் உதவிகள் செய்து கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில்...

கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக 8112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7994 குழந்தைகள் மீட்கப்பட்டு உரிய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 15 நாட்களில் மட்டும் காணாமல்போன 17 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆண்டில் மட்டும் 50 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 80 கொத்தடிமை குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com