

கூடலூர்,
தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
கூடலூர் சட்டமன்ற தொகுதி கேரளா-கர்நாடக மாநிலங்களின் கரையோரம் உள்ளது. இதில் கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் கூடலூர் அருகே உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கேரளாவில் மது பாட்டில்களை தமிழகத்தை விட கூடுதலாக விற்கப்படுகிறது.
இதனால் கூடலூர் பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கேரளாவுக்கு அதிக அளவு கடத்தப்படுவதாக மலப்புரம், வயநாடு மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் கேரள போலீசார் வாகன சோதனை தீவிரப்படுத்தினர்.
இதன்படி கூடலூர்- கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட சோதனைச்சாவடிகளில் கேரள போலீசார் தமிழக போலீசாருடன் இணைந்து மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கேரள போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனால் கேரள உயர் அதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை தமிழக பகுதியில் முகாமிட்டு வாகன சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.