போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக பணம் வசூலித்த போலி வக்கீல் கைது

ஊரடங்கை மீறி சுற்றியதாக போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலி வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக பணம் வசூலித்த போலி வக்கீல் கைது
Published on

செங்குன்றம்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர அனாவசியமாக இரு சக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் சில நாட்கள் கழித்து போலீசாரே உரியவர்களிடம் திருப்பி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணை மாத்தூர் மஞ்சம்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்த இன்பநாதன் உள்பட பலரது மோட்டார் சைக்கிள்களை ஊரடங்கை மீறி சுற்றியதாக போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசக்தி வடிவேல் (வயது 50), நான் ஒரு வக்கீல். மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் எனது நெருங்கிய நண்பர். அவருக்கு பணம் கொடுத்தால் போலீசார் பறிமுதல் செய்து உள்ள உங்கள் வாகனங்களை மீட்டு தருகிறேன் என்றார்.

அதை உண்மை என்று நம்பிய இன்பநாதன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தலா ரூ.600 வீதம் ஜெயசக்தி வடிவேலுவிடம் கொடுத்தனர். பின்னர் பணம் கொடுத்த அனைவரையும் நேற்று காலை புழல் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தார். அவர்களை கீழே நிற்க வைத்துவிட்டு போலீஸ் நிலையத்தின் மாடிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த ஜெயசக்தி வடிவேல், இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டேன். உங்கள் வாகனங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் கொடுத்துவிடுவார் என்று கூறிவிட்டு அங்கிருந்து நைசாக செல்ல முயன்றார்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சட்டம் ஒழுங்கு போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வக்கீல் இல்லை. போலி வக்கீல் என்பதும், இன்ஸ்பெக்டர் தனது நண்பர் என்றுகூறி போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com