நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் நிறைவு: கொள்ளையன் சுரேஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் நிறைவடைந்ததையொட்டி கொள்ளையன் சுரேஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் நிறைவு: கொள்ளையன் சுரேஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
Published on

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது. பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் தங்களது கைவரிசையை காட்டி நகைளை கொள்ளையடித்து சென்றது. பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொள்ளை குறித்து திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படையினரும் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவனை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோட்டை போலீசார் திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 7 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. கடந்த 14-ந் தேதி முதல் அவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. மேலும் திருச்சி நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டான்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுரேசுக்கு போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று மாலை சுரேசை பலத்த பாதுகாப்புடன் போலீசார் திருச்சி கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 2-ல் மாஜிஸ்திரேட்டு திரிவேணி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது கொள்ளையன் சுரேஷிடம் மாஜிஸ்திரேட்டு, போலீசார் உங்களை அடித்தார்களா? சாப்பாடு முறையாக வழங்கினார்களா? என்று கேட்டார். அதற்கு அவன் போலீசார் அடிக்கவில்லை எனவும், சாப்பாடு வழங்கியதாகவும் தெரிவித்தான். சுரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், போலீசார் மீது சில குற்றச்சாட்டுகளை கூறினர்.

இதைத்தொடர்ந்து சுரேசை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் வருகிற 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கூறினார். அதன்பின் சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறையில் அவன் அடைக்கப்பட்டான்.

நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கிலும் சுரேசுக்கு தொடர்பு இருப்பதால் அவனை அந்த வழக்கு தொடர்பாக போலீஸ் காவலில் விசாரணை நடத்த கொள்ளிடம் டோல்கேட் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்ரீரங்கம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் சுரேசுக்கு போலீஸ் காவல் வழங்குவது குறித்து தெரிந்துவிடும். இந்த வழக்கில் ஏற்கனவே மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவரும், திருவாரூர் முருகனின் கூட்டாளியுமான கணேசனை கடந்த 18-ந் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com