

திண்டுக்கல்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி மொத்தம் 747 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே வாக்காளர்கள், எந்தவித அச்சமும் இல்லாமல் இயல்பாக வந்து வாக்களிக்கும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த பகுதிகளை தேர்வு செய்து கொடி அணிவகுப்பு நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல்லில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு இருந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு தொடங்கியது. இதனை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்து அணிவகுப்புடன் நடந்து சென்றார். இந்த கொடி அணிவகுப்பு முக்கிய சாலைகள் வழியாக மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதேபோல் பழனி உள்பட மேலும் சில இடங்களில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.