

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் மாதப்பன் என்கிற மாதேஷ் (வயது 24). இவன் மீது தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, தாக்குதல் உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை கவிநரசிம்மர் கோவிலுக்குள் நுழைந்த மாதேஷ் அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருடி சென்றான். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேன்கனிக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கன் ரகுநாதன் உள்பட போலீசார் மாதேஷை தேடினார்கள். அப்போது அஞ்செட்டி சாலையில் நடந்த சென்ற மாதேஷை போலீசார் பிடிக்க முயன்றபோது மாதேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கண் ரகுநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினான்.
இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த தேன்கனிக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளி மாதேசை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மாதேஷ் கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பைரமங்கலம் பஸ் நிலையத்தில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுநாதன், கதிரவன் மற்றும் போலீஸ்காரர்கள் சிவக்குமார், சந்திரகுமார் ஆகிய 4 பேர் மாதேஷை பிடிக்க சென்றுள்ளனர். பைரமங்கலம் பஸ் நிலையத்தில் போலீசார் குற்றவாளி மாதேஷை பிடிக்க முயன்றபோது அவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை குத்தினான்.
இதில் போலீஸ்காரர் சிவக்குமாருக்கு இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மாதேஷை மடக்கி பிடித்து கைது செய்தனர். காயமடைந்த போலீஸ்காரர் சிவக்குமாரை கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு கையில் 7 தையல்கள் போடப்பட்டது. பிடிபட்ட மாதேஷ் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தனிப்படை போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த திருடனை பிடிக்க சென்ற இடத்தில் மீண்டும் ஒரு போலீஸ்காரரை திருடன் கத்தியால் குத்திய சம்பவம் தேன்கனிக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.