12 வயது சிறுவனை இன்ஸ்பெக்டராக்கி ஆசையை நிறைவேற்றிய போலீசார்: பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்

நோயால் அவதிப்பட்டு வரும் 12 வயது சிறுவனை போலீஸ் இன்ஸ்பெக்டராக்கி அவனது ஆசையை பெங்களூரு போலீசார் நேற்று நிறைவேற்றினர்.
12 வயது சிறுவனை இன்ஸ்பெக்டராக்கி ஆசையை நிறைவேற்றிய போலீசார்: பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா நாராயணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜூ. இவருடைய மகன் சஷாங்க்(வயது 12). இவன் தாலாசீமியா எனும் நோயால் அவதிப்பட்டு வருகிறான். சஷாங்கிற்கு பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சஷாங்கிடம் பேசியபோது, அவனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற ஆசை இருப்பது தெரியவந்தது.

இதனால், சஷாங்கை போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றி பார்க்க வேண்டும் என்று அவனது பெற்றோரும், தனியார் தொண்டு நிறுவனத்தினரும் விரும்பினர். இதுதொடர்பாக அவர்கள் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பாவை சந்தித்து பேசியதோடு, சஷாங்கை போலீஸ் இன்ஸ்பெக்டராக்கி போலீஸ் நிலையத்தில் அமர வைக்க அனுமதிக்கும்படி கேட்டு கொண்டனர். இதற்கு துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா ஒப்புக்கொண்டார்.

அதன்படி, நேற்று சஷாங்கின் ஆசை நிறைவேற்றப்பட்டது. வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சஷாங்கிற்கு போலீஸ் உடை, தொப்பி, ஷூ அணிவிக்கப்பட்டது. கையில் துப்பாக்கி ஒன்றும் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீஸ் ஜீப்பில் ஆஸ்பத்திரியில் இருந்து வி.வி.புரம் போலீஸ் நிலையத்துக்கு சஷாங்க் அழைத்து வரப்பட்டான். இன்ஸ்பெக்டர் ராஜூ அவனை வரவேற்றார்.

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த அனைவரிடமும் சஷாங்க் பேசினான். பின்பு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் இருக்கையில் சிறுவன் சஷாங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ அமரவைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் சிறுவன் சஷாங்க் இருக்கையில் அமர்ந்து சில கோப்புகளை பரிசீலனை செய்தான். போலீஸ் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள், கைதிகள் இருக்கும் அறைகள் ஆகியவற்றையும் சஷாங்க் ஆய்வு செய்தான்.

இந்த வேளையில், சஷாங்கிடம் எதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டராக விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சஷாங்க் பதிலளிக்கையில், மதுபானம் குடித்துவிட்டு குடிபோதையில் தகராறு செய்பவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கவே போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆசைப்படுகிறேன் என்றான்.

அதைத்தொடர்ந்து போலீஸ் ஜீப்பில், ரோந்து பணியில் ஈடுபட்ட சஷாங்க், துணை போலீஸ் கமிஷனர் சரணப்பாவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தான். இந்த வேளையில், துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, சஷாங்கிற்கு பூங்கொத்து கொடுத்து விரைவில் நோய் குணமாகி போலீஸ் பணியில் சேர வாழ்த்து தெரிவித்தார். இதனை பார்த்து சஷாங்கின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். இந்த சம்பவம் நேற்று சஷாங்க் மற்றும் அவனது பெற்றோரை நெகிழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைக்க செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com