

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே 6 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வருவதால் போக்குவரத்துக்காக அரசு பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தாம்பரத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றனர். பஸ் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது பஸ்சை வழிமறித்த இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையிலான போலீசார் மாணவர்களை எச்சரித்து பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். பின்னர் கூட்டம் குறைவாக சென்ற பஸ்சில் ஏற்றி அனுப்பினர்.