போலீஸ் தேர்வுக்கான வினாத்தாள் வெளியிட்ட வழக்குகள்: உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் என 149 பேர் கைது - கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் பேட்டி

போலீஸ் தேர்வுக்கான வினாத்தாள் வெளியிட்ட வழக்குகளில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் என்று 149 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் கூறினார்.
போலீஸ் தேர்வுக்கான வினாத்தாள் வெளியிட்ட வழக்குகள்: உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் என 149 பேர் கைது - கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் பேட்டி
Published on

பெங்களூரு,

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 25-ந் தேதி போலீஸ்காரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடக்க இருந்தது. ஆனால் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானது. இதனால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் மாதம் 24-ந் தேதி குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா சனிவாரசந்தே உள்ள பள்ளியில் சோதனை நடத்தி முக்கிய குற்றவாளி சிவக்குமார் என்ற சிவகுமாரய்யா, அவருடைய உதவியாளர் நவீன் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 117 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனையின்போது பசவராஜூ என்பவர் தலைமறைவானார்.தொடர்ந்து நடத்திய விசாரணையில் வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த பசவராஜூ, மகேஷ், சுனில் குமார், சோமப்பா யமனப்பா மேலினமனி, கிரியல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் போலீசுக்கு பயந்து பிஸ்லா வனப்பகுதியில் புதைத்து வைத்த பிரிண்டர், பணம் எண்ணும் எந்திரம், ஸ்கேன் செய்யும் எந்திரம் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. வழக்கில் சம்பந்தப்பட்ட குமாரசாமி, ப்ருங்கேஷ் ஆகியோர் முன்ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள்.

மேலும், ஜனவரி மாதம் 26-ந் தேதி சஞ்ஜீவா பீமண்ணா தொட்டமணி, காந்தராஜூ என்ற ஸ்ரீகாந்த் ஆகியோர் சிக்கினர். ஜனவரி மாதம் 29-ந் தேதி முக்கிய குற்றவாளியான அமீர் அகமது என்பவரை தாவணகெரேயில் கைது செய்தோம். அமீர் அகமது உடுப்பி மாவட்டம் மணிப்பால் தொழில்நுட்பம் யூனிட்-1-ல் உள்ள பிரிண்டிங் மையத்தில் பணி செய்யும் அனில் என்பவருடன் உதவியுடன் வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து பசவராஜூவிடம் ரூ.55.50 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் ரூ.20 லட்சத்தை தாவணகெரேயில் உள்ள கிராம வங்கியில் வாங்கிய கடனை அடைத்ததோடு, ரூ.17 லட்சம் அனிலுக்கு வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான வினாத்தாளை திருடி விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முயன்ற திட்டம் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேர்வுக்கு முந்தைய நாளான 12-ந் தேதி மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினோம்.

இந்த சோதனையின்போது வினாத்தாள் வெளியிட முயன்றதாக பெலகாவி மாவட்டத்தில் சிவக்குமார் மாடகேஷ்வரா, பாக்யவந்தா, அருண் ராயப்பா, அனுமேஷ், நீலம்மா, ஜெயஸ்ரீ, சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் வழக்கு தொடர்பாக கட்டுப்பாட்டை அறையில் பணி செய்யும் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜூ, கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர் ரமேஷ் மல்லி, அல்சூர் போக்குவரத்து போலீஸ்காரர் விட்டல் பியாகோட், இலகல் புறசபை வருவாய் அதிகாரி நாமதேவா, ஓதிகால் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பீம்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இன்னொரு பசவராஜூ, ஹோலியப்பா, சுரேஷ், கார்த்தி, திலீப் குமார், யதுகுமார், ஹர்ஷாகுமார், ஈரமல்லப்பா, ஸ்ரீசைல பூஜாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ரூ.24.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 149 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.67.73 லட்சம், 36 செல்போன்கள், 17 வாகனங்கள், 2 பிரிண்டர், ஒரு மடிக்கணினி, ஒரு டேப்லேட், போலீஸ்காரர் தேர்வுக்கான 98 வினாத்தாள் நகல், 138 நுழைவு சீட்டுகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த கும்பல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி பி.எம்.டி.சி. அரசு போக்குவரத்து கழகத்துக்கு கண்டக்டர்கள் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது தெரியவந்தது. அதுபற்றியும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com