நாங்குநேரி தொகுதியில் “வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

“நாங்குநேரி தொகுதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது” எனவும், வாக்குரிமை மிக முக்கியமானது என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாங்குநேரி தொகுதியில் “வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
Published on

மதுரை,

தமிழர் விடுதலைகளம் அமைப்பின் தலைவர் ராஜ் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் ஆதிதிராவிடர் பட்டியலில் வரும் 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.

தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ள நாங்குநேரி தொகுதியில் 133 கிராமங்களில் இந்த சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றி, ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே நாங்குநேரி தொகுதியில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தும் தேவேந்திர குல வேளாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் ஆஜராகி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது அவரவரின் தனிப்பட்ட உரிமை. அவர்களை போலீசார் தொந்தரவு செய்கிறார்கள். இதனால் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் அவர்கள் உள்ளனர் என்று வாதாடினர். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதி பெறாமல் கருப்பு கொடி ஏற்றுகின்றனர் என்றார்.

விசாரணை முடிவில், ஜனநாயக நாட்டில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அதை புறக்கணிப்பதால் மக்களின் கோரிக்கை உரிய இடத்தில் எதிரொலிக்காமல் போய்விடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றியிருந்தால் அப்புறப்படுத்தலாம். வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தால் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com