

தூத்துக்குடி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, புற்றுநோய் போன்ற நோய்கள் பரவுவதற்கு இந்த ஆலை கழிவு காரணமாக இருந்து உள்ளது.
எனவே கோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருந்தாலும்கூட, அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்க முடியும். அந்த முடிவை அரசு விரைவாக எடுக்க வேண்டும். தொடர் போராட்டத்தை கருத்தில் கொண்டு, மக்களின் உணர்வுகளை மதிக்கிற வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கிற வகையிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நீட் தேர்வு நடந்து முடிந்து உள்ளது. இதில் மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். தேர்வு எழுத சென்ற இடத்தில் மாணவனின் தந்தை உயிர் இழந்து உள்ளார். இன்று அந்த குடும்பத்துக்கு ஆட்சியாளர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். இழப்பீடு வழங்குகிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். நீட் தேர்வு மையத்தை பிற மாநிலங்களுக்கு மாற்றியது தொடர்பான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் நீர்த்து போகும் வகையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடியதால், நீதிபதிகள் அந்த தீர்ப்பை வழங்கும் நிலை ஏற்பட்டது. ஒருபுறம் தலித் மக்களின் நலன்களை பாதுகாப்பது போன்ற அணுகுமுறை. மற்றொரு புறம் பாதுகாப்புக்கான ஒரே சட்டமான வன்கொடுமை சட்டம் நீர்த்து போகும் வகையிலான நிலைப்பாடு. மத்திய அரசு இந்த இரட்டை வேடம் போடுவதை கண்டிக்கிறோம். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் எல்லா ஆறுகளிலும் சட்டத்துக்கு புறம்பாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. அரசு இதற்கு துணையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மணல் கொள்ளையர்களால் நெல்லை மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஏட்டு கொல்லப்பட்டு இருக்கிறார் என்றால், அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள கும்பலை கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட ஏட்டு குடும்பத்துக்கு அரசு உடனடியாக ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை(அதாவது இன்று)நடக்கிறது. அன்று தி.மு.க. தலைமையிலான தோழமை கட்சிகள் கூடி கலந்தாய்வு செய்ய உள்ளோம். அதற்கான அறிவிப்பை தி.மு.க. செயல் தலைவர் வெளியிட்டு உள்ளார். 5-ம் கட்ட போராட்டம் என்ன என்பதை அன்று மாலை அறிவிப்போம். அரசு ஊழியர்களின் போராட்டம் அறவழிப் போராட்டம். அவர்களை முன்கூட்டியே கைது செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்கள் மீதான இந்த அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.