சென்னையில் மயக்க ஊசி போட்டு போலீஸ்காரர் கடத்தல்

சென்னையில் மயக்க ஊசி போட்டு உளவுப்பிரிவு போலீஸ்காரரை காரில் கடத்திச்சென்று செல்போன் மற்றும் ரூ.1 லட்சத்தை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையில் மயக்க ஊசி போட்டு போலீஸ்காரர் கடத்தல்
Published on

உளவுப்பிரிவு போலீஸ்காரர்

சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 45). உளவுப்பிரிவு போலீஸ்காரர். இவர் கடந்த 28-ந்தேதி பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரிடம், அதே தெருவை சேர்ந்த அஜய் விக்கி (25) என்பவர், தன்னுடைய காரில் ஏறுங்கள், போகும் வழியில் விட்டு செல்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே போலீஸ்காரர் ரவியும் அவருடைய காரில் ஏறினார். அப்போது அந்த காரில் மேலும் 2 பேர் இருந்துள்ளனர்.சிறிது தூரம் சென்றவுடன் அவர்கள் போலீஸ்காரர் ரவிக்கு மயக்க ஊசி செலுத்தி கடத்தி சென்றனர். அவரை காரில் 18 மணி நேரம் வைத்து சுற்றிய அந்த கும்பல் அவரது செல்போன், கூகுள் பே மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்துள்ளனர். பின்னர் அவரை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

பரபரப்பு தகவல்

உளவுப்பிரிவு போலீசார் காக்கி சீருடை அணியாமல் சாதாரண உடையில்தான் இருப்பார்கள். எனவே சாலையோரம் மயங்கி கிடந்த போலீஸ்காரர் ரவியை, யாரோ போதை ஆசாமிதான் குடிபோதையில் படுத்து கிடக்கிறார் என்று நினைத்து பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் மயக்கம் தெளிந்தவுடன் ரவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், ஆட்டோ மூலம் வீடு திரும்பினார். நடந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, அஜய் விக்கி தனக்கு 15 ஆண்டுகள் நன்கு அறிமுகம் ஆனவர். பணம், செல்போனுக்கு ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டார். என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் தலைமறைவாக உள்ள 3 பேர் கும்பலை கைது செய்ய தேடும் பணியில் சூளைமேடு போலீசார் இறங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com