

பிராட்வே,
சென்னை ஏழுகிணறு புனித தாமஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 31). ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை தனது நண்பரை ஊருக்கு அனுப்புவதற்காக சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார்.
பின்பு நண்பரை ரெயிலில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பி செல்வதற்காக எதிரே இருந்த ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது தான் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த வாலிபரிடம் மாயமான தனது செல்போன் இருந்தது கவாஸ்கருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து பூக்கடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த சுனில் (23) என்பதும், கவாஸ்கரின் செல்போனை திருடியதும் தெரியவந்தது.
சுனிலை கைது செய்த போலீசார் அவர் இதுபோல் வேறு எங்கும் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் அதிகளவில் வந்து செல்லும் சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரே போலீஸ்காரரிடம் செல்போன் திருட்டு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.