

இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் வாக்களிக்க எந்தவித அச்சமும் படத்தேவையில்லை. பாதுகாப்பு பணியில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன்படி சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீஸ், துணை ராணுவ படை அணிவகுப்பு, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர்கள் வளர்மதி, அரிகரன், சிவக்குமார், ஷிபுகுமார் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார், துணை ராணுவ படையினர் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது. தாம்பரம் ரங்கநாதபுரம், கஸ்தூரிபா நகர், காந்தி ரோடு, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.
பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன், தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிரபாண்டி, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின் உள்பட ஏராளமான போலீசாரும் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.