சேலம் மாவட்டத்தில் 2,255 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேலம் மாவட்டத்தில் 2,255 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. ஓமலூர் சுங்கச்சாவடியில் முகாமை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் 2,255 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

சேலம்,

நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 66 ஆயிரத்து 945 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கோவில்கள், சுங்கச்சாவடிகள் என 2,255 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஓமலூர் சுங்கச்சாவடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதில் வெற்றிவேல் எம்.எல்.ஏ., இணை இயக்குனர் (நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டு மையம்) நிர்மல்சன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செல்வகுமார், மாநில தாய்சேய் நல இணை அலுவலர் சசிதேவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளில் 120 சுகாதாரத்துறை களப்பணியாளர்கள், 4,234 அங்கன்வாடி பணியாளர்கள், 64 வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 165 தன்னார்வலர்கள், 638 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த 3,584 அலுவலர்கள் ஈடுபட்டனர். இவர்களுடைய பணிகளை 268 சுகாதாரத்துறை அலுவலர்கள் பார்வையிட்டு கண்காணித்தனர்.

மாநகராட்சி பகுதிகள்

மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 5 வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளுக்கு கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும் என்றும், முக்கியமாக முகாமிற்கு முககவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 வயதுக்குட்பட்ட 89 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் நகர்நல அலுவலர் பார்த்திபன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செண்பகவடிவு, மாநகராட்சி தாய்சேய் நல அலுவலர் சுமதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நடமாடும் குழுக்கள்

மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 9 நடமாடும் குழுக்களின் பணியாளர்கள் குடிசை மற்றும் சாலையோரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி 3 லட்சத்து 49 ஆயிரத்து 525 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com