அரசியல் சட்டத்தை நீர்த்து போக செய்ய மத்திய அரசு முயற்சி - பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

அரசியல் சட்டத்தை நீர்த்து போக செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.
அரசியல் சட்டத்தை நீர்த்து போக செய்ய மத்திய அரசு முயற்சி - பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு
Published on

சேலம்,

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா, காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை சேலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டக்குழு அலுவலகம் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி வரவேற்றார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு காரல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

விஞ்ஞான ரீதியில் சமூகத்தை ஆய்வு செய்த காரல் மார்க்சுக்கு சேலத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் மதசார்பற்ற கொள்கையே தகர்த்து போகும் அளவிற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. அரசியல் சட்டத்தை நீர்த்து போக செய்யும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஒரு மாநிலத்தை ஆள்வதை தாங்கி கொள்ள முடியாமல் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்து யூனியன் பிரதேசமாக பா.ஜனதாவினர் மாற்றிவிட்டனர்.

கடந்த 2 மாதங்களாக அங்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தின் மீது தொடக்கப்பட்ட சர்வாதிகார நடவடிக்கை ஆகும். மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற நிலையை ஏற்படுத்த பா.ஜனதா அரசு தயங்காது. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மாற்றங்கள் கொண்டு வர அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்திய பொருளாதார வீழ்ச்சி மற்றும் தேக்க நிலை காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் தொழிலாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதிகேட்டு ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், செல்வசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com