கடலூர், விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம், சாதி, மதத்தை கூறி அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன் பேச்சு

சாதி, மதத்தை கூறி அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்று கடலூர், விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
கடலூர், விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம், சாதி, மதத்தை கூறி அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன் பேச்சு
Published on

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து கடலூர் உழவர் சந்தை முன்பு, காடாம்புலியூர், விருத்தாசலம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மோடியோடு ஜோடிபோட்டுக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற பழனிசாமி கம்பெனிக்கும், தமிழ்நாட்டையும், இந்தியாவையும் வஞ்சித்து வருகின்ற தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட மோடியையும் முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு வாய்ப்பாக இந்த தேர்தல் வந்திருக்கிறது.

இன்னொரு கூட்டணியான மதசார்பற்ற மக்கள் கூட்டணியை உங்களுக்கு தெரியும். ஏற்கனவே நாங்கள் இஸ்லாமியர்களின் காவலர்கள், இந்து கடவுள்களை நாங்கள் மதிப்பதில்லை என்று சொன்னார்கள். தற்போது அவர்கள், இந்துக்கள் எங்களின் எதிரி இல்லை என்று கூறி அவர்களின் கால்களில் போய் விழுகிறார்கள். அரசியல்வாதிகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு சாதி, மதம் தேவையில்லை என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு காத்திருக்கிறார்கள். அதுபோல எல்லைதாண்டி மீன்பிடித்தால் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விவசாயி விளைவிக்கின்ற விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவில்லை. ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசியல் கட்சிகளும், ஆட்சியில் இருப்பவர்களும் யோசிக்க வேண்டுமே தவிர மதத்தையும், சாதியையும் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. சாதி, மதத்தை கூறி அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாயையை உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் 80 சதவீதம் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தாய்மார்களும், பெரியோர்களும் இன்று புதிய மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிகமாக உள்ள மீனவர்கள், விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்களை கொண்டு வருவோம். கடலூர்-புதுச்சேரி ரெயில்பாதை திட்டம், அறிவிப்பு நிலையில் உள்ள புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

தொன்மை நகரமான கடலூர் பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்க, கடலூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய, கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நவீன முறையில் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளகாலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் செயல்படுத்தப்படும். கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கவேலுக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சோழன்சம்சுதீன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் செந்தில்குமார், விருத்தாசலம் நகர செயலாளர் மார்க்கெட் நடராஜன், நடுவீரப்பட்டு ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கடலூர் நகர செயலாளர் வி.கே.எம்.முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com