பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைப்பு

பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைப்பு
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி மதுபான பார் ஏலம் நடைபெற்றது. அப்போது ஏலம் முறைகேடாக நடப்பதாக கூறி தி.மு.க.வினர் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பார் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் அ.தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் திரு மண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கமாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மாலையில் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் மாலை 7 மணி ஆகியும் கைதானவர்களை விடுதலை செய்யவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்த தி.மு.க.வினர் போலீஸ் திருமண மண்டபம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில் போராட்டத்தில் கைதான 65 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கில் சதி திட்டம் தீட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நகர கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com