பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் பலாத்கார வீடியோக்கள் 90 சதவீதம் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய 90 சதவீத வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் பலாத்கார வீடியோக்கள் 90 சதவீதம் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் வீடியோக் கள் முகநூல், வாட்ஸ்-அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுத்து அவற்றை அழிக்க வேண்டும் என்றும், அதை முதலில் பதிவேற்றம் செய்தவர் யார்? என்பது பற்றிய தகவலை அளிக்குமாறு யூ-டியூப், முகநூல், வாட்ஸ்-அப் ஆகிய நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பினார்கள்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் ஒரு ஆடியோ பரவியது. அதில் பேசிய பெண் ஒருவர், சிறுமியை ஒரு கும்பல் விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்து விட்டதாகவும், அந்த சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார்கள். அதில் சிறுமியின் ஆடியோவை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தவர் யார்? என்பது பற்றிய தகவலை தெரிவிக்குமாறும் கேட்டிருந்தனர்.

இதற்கிடையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வீடியோக்களை அழிக்கக்கோரி கடிதம் அனுப்பியதில் 90 சதவீத வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாகவும் யூ-டியூப் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விளக்கம் அளித்து உள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் பற்றிய எந்த தகவலையும் யூ-டியூப் நிறுவனம் கூறவில்லை என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் புகார் கூறிய கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் (28) என்பவர் கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுடன் மணிவண்ணனுக்கு உள்ள தொடர்பு பற்றியும், யாருடைய தூண்டுதலின்பேரில் புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணன் தாக் கப்பட்டார் என்றும் அவரிடம் விசாரணை நடந்தது. சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் பரவியது குறித்தும், மணிவண்ணனிடம் போலீசார் கேள்விகள் எழுப்பினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரது நண்பர்கள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்த பெண்கள் யார்-யார்? பாதிக்கப்பட்டதாக ஒருவர் பேசுவதாக வெளியான ஆடியோவில் பேசிய பெண் யார்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com