பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ஊட்டியில் த.மு.மு.க.வினர் சாலை மறியல் 35 பேர் கைது

ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ஊட்டியில் த.மு.மு.க.வினர் சாலை மறியல் 35 பேர் கைது
Published on

ஊட்டி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும் நேற்று காலை 11.30 மணியளவில் ஏ.டி.சி. திடலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் குறித்த பிளக்ஸ் பேனரை கொண்டு வந்து வைத்தனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி இல்லை என்று கூறினர். மேலும் அந்த பிளக்ஸ் பேனரை அங்கிருந்து அகற்றினர்.

இதையடுத்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மைக் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை கைப்பற்ற முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், த.மு.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாகீர், நீலகிரி மாவட்ட தலைவர் அப்துல் சமது உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். அங்கு மதிய உணவு கிடைக்காததால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com