

பொள்ளாச்சி,
தமிழக அரசு போக்குவரத்து துறை மற்றும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி காந்தி சிலை சிக்னலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தலைமை தாங்கி, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முனுசாமி, செல்வதீபா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ரோட்டரி ராயல்ஸ் அரிமா சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- உலகில் சாலை பரப்பளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 4 மில்லியன் கிலோ மீட்டர் சாலை பரப்பு உள்ள நாடு இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சாலையில் வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. சிறிய கவன குறைவால் பெரிய விபத்துக்களும், விளைவுகளும் ஏற்படும். முறையான பயிற்சி பெற்ற பிறகே வாகனங்களை ஓட்ட வேண்டும்.
உலகிலேயே அதிகமான சாலை விபத்துக்கள் இந்தியாவில் தான் ஏற்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 4 லட்சத்து 517 சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். நம் நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 17 நபர்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். குடிபோதையில், செல்போன் பேசிக்கொண்டும், அதிவேகமாகவும் வாகனங்களை ஓட்டக்கூடாது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதே தண்டனை 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினாலும் விதிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், 18 வயதுக்கு குறைவானவர்களிடம் தங்கள் வாகனத்தை ஓட்ட பெற்றோர் அனுமதித்தால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் முதல் தடவை ரூ.2 ஆயிரம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். 3 ஆண்டுக்குள் மீண்டும் செய்தால் ரூ.3 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டு, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சாலைவிதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டினால் 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். எனவே சாலை விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைபிடித்து பொள்ளாச்சியை விபத்தில்லா நகரமாக மாற்ற அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.