மானாமதுரை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரி மூட்ட கூண்டுகள் அகற்றம்

மானாமதுரை அருகே சுற்றுச்சூழலைமாசுபடுத்தும் வகையில் செயல்பட்டு வந்த கரி மூட்ட கூண்டுகளை அதிகாரிகள் அகற்றினர்.
மானாமதுரை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரி மூட்ட கூண்டுகள் அகற்றம்
Published on

மானாமதுரை,

மானாமதுரையை அடுத்த அன்னவாசல் புதூர் அருகே தனியார் சார்பில் உரிய அனுமதியின்றி அடுப்புக்கரி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தப்பட்டு வந்தது. அடுப்புக்கரி தயாரிப்பிற்காக அங்கு 30-க்கும் மேற்பட்ட கரி தயாரிக்கும் கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கூண்டுகளில் வைத்து விறகுகளை எரிப்பதால் அந்த பகுதி முழுவதும் கரு நிறத்திலான புகை அதிக அளவில் வந்தது. இந்த புகை காற்றில் கலந்து அதனை சுவாசித்த அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் அந்த கிராம மக்கள் கண் எரிச்சல், பார்வை குறைபாடு, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அந்த கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார் மனுக்களை அளித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தங்கரதி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் போது அளவிற்கு அதிகமான புகை வெளியேறுவது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது குறித்து அந்த தனியார் நிறுவனத்திற்கு கரி மூட்ட கூண்டுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நேற்று வரை கூண்டுகளை அகற்ற தனியார் நிறுவனம் முன் வரவில்லை. இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளவேணி மற்றும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் ஆகியோர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு சென்று ஜே.சி.பி எந்திரம் மூலம் அந்த கரிமூட்ட கூண்டுகளை இடித்து அகற்றினர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com