போளூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கோட்டை நோக்கி குடும்பத்துடன் நடைபயணம் செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

போளூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் 7 மாதமாக சம்பளம் வழங்காததால், முதல்-அமைச்சரை சந்திக்க குடும்பத்துடன் நடைபயணமாக புறப்பட்ட ஊழியர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
போளூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கோட்டை நோக்கி குடும்பத்துடன் நடைபயணம் செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்
Published on

போளூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கரைப்பூண்டியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 7 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய ரூ.26 கோடி நிலுவைத்தொகையையும் வழங்கவில்லை.

இதுசம்பந்தமாக பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். பலமுறை கலெக்டர், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குடும்பத்துடன் முதல்-அமைச்சரை சந்திக்க கோட்டைநோக்கி நடைபயணம் செல்ல முடிவு செய்தனர்.

குடும்பத்துடன் நடை பயணம்

இதை அறிந்ததும் நேற்று சர்க்கரை ஆலை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நடைபயணமாக செல்ல சர்க்கரை ஆலை ஊழியர்களும் குடும்பத்தினருடன் அங்கு குவியத்தொடங்கினர். பின்னர் முதல்-அமைச்சரை சந்திக்க அங்கிருந்து கோட்டை நோக்கி குடும்ப ந்துடன் சி.ஐ.டி.யு. மாநில துணைப்பொது செயலாளர் வி.குமார் தலைமையில் நடைபயணமாக செல்ல முற்பட்டனர்.

20 பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 100 பேர் சிறிது தூரம் நடைபயணமாக சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில், துணை போலிஸ் சூப்பிரண்டுகள் அறிவழகன், கோட்டீஸ்வரன், தாசில்தார் ஜெயவேல் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தள்ளுமுள்ளு- மறியல்

ஆனால் தடுப்புகளை மீறி சென்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அவர்கள். திடீரென்று போளூர்- சேத்துப்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com