பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர்

பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர்
Published on

பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரின் 82-வது பிறந்தநாள் விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது.

கடந்த மாதம் 28-ந் தேதியன்று காலை மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் வரவேற்று பாதபூஜை செய்தனர். மேலும் மாலை 4 மணியளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கடந்த 1-ந் தேதியன்று ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளாரை பக்தர்கள் வெள்ளி ரதத்தில் அழைத்து வந்தனர். மாலையில் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள்

இதேபோல் நேற்று முன்தினம் காலையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்வை வக்கீல் அகத்தியன் தொடங்கி வைத்தார். பின்னர் பங்காரு அடிகளாரை விழுப்புரம், கடலூர் மாவட்ட பக்தர்கள் தங்கரதத்தில் அழைத்து வந்தனர். மேலும் மாலை வேளையில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி விழா பேருரையாற்றினார். பின்னர் அவர் விழா மலரை வெளியிட லட்சுமி பங்காரு அடிகளார் பெற்றுக்கொண்டார்.

நலத்திட்ட உதவிகளாக லேப்டாப், ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், கல்வி உதவித்தொகை, ஏழை எளியவர்களுக்கு தொழில் செய்ய நிதி உதவி, வீடுகள், இஸ்திரி பெட்டி, சைக்கிள், மரக்கன்றுகள், அரிசி உள்ளிட்ட பொருட்களை பங்காரு அடிகளார் 3 ஆயிரம் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.

பக்தர்களுக்கு ஆசி

இதனையடுத்து நேற்று காலை விழா கோலாகலமாக சித்தர் பீடத்தில் மங்கள இசையுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாரை செவ்வாடை பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களும், வெளிநாடு வாழ் செவ்வாடை பக்தர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பங்காரு அடிகளார் பிறந்த நாள் கேக்கினை பேரக்குழந்தைகள் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பங்காரு அடிகளார் ஆசி வழங்கினார். இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், செய்யூர் எம்.எல்.ஏ.பனையூர் பாபு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன, ஓய்வு பெற்ற தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், இசை அமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களும், செவ்வாடை பக்தர்களும், பொது மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ரமேஷ், கல்வி நிலையங்களின் தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ், தொழிலதிபர் ஜெய்கணேஷ், வக்கீல் அகத்தியன், ஆஷா அன்பழகன், டாக்டர் ஸ்ரீலேகா செந்தில்குமார்,பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சிவ செந்தமிழ் அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com