

சேலம்,
காணும் பொங்கல் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சேலம் மாவட்டம் மேட்டூருக்கு அதிகாலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்களில் சிலர் மேட்டூர் காவிரி பாலம் அருகே சென்று, மறைந்த தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் நீராடினர். பின்னர் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். உணவு சமைத்து பூங்காவுக்கு எடுத்துச்சென்று நண்பர்கள், உறவினர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதையொட்டி மேட்டூர் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுவர், சிறுமிகள் பூங்காவில் உள்ள ராட்டினம், சறுக்கு போன்றவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி மேட்டூர் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏற்காடு பூலாம்பட்டி
காணும் பொங்கலையொட்டி ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு இல்லத்தில் நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் இருந்தனர். அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். ஏற்காட்டில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. இதமான சூழ்நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எடப்பாடி ஒன்றியம் பூலாம்பட்டி காவிரி ஆற்றின் கரையோரம் பாலமலை அடிவாரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீராடினார்கள். விசைப்படகில் சவாரி செய்தனர். பூலாம்பட்டி கைலாசநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
கஞ்சமலை கோவில்
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சித்தேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. சேலம், இளம்பிள்ளை, சித்தர்கோவில், சின்னப்பம்பட்டி, திருமலைகிரி, கே.ஆர்.தோப்பூர், வேம்படிதாளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். புனித தீர்த்த குளத்தில் நீராடினர். அங்குள்ள புனித உப்பு குளத்தில் தோல் நோய் நீங்கவும், மரு நீங்கவும் வேண்டி உப்பை போட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.