அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் விழா; அரிவாள் மீது ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரிவாள் மீது ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு கூறினார்.
அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் விழா; அரிவாள் மீது ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி மந்தையைச் சேர்ந்த 24 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சார்பில், 3 வருடத்திற்கு ஒருமுறை ஆடி 18-க்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமையில் அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் பொங்கல் வைத்து விழா நடத்துவது வழக்கம். இக்கோவில் வளாகத்தில் உள்ள வைரபெருமாளுக்கு படைத்து வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூடான பொங்கலை மலைபூசாரி என்றழைக்கப்படுபவர் பானையில் கைவிட்டு எடுத்து படைப்பது முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்தநிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு 24 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சார்பில் ரெத்தினகிரீசுவரர் கோவிலில் நேற்று மதியம் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று கோவில் வளாக பகுதியில் இச்சமுதாயத்தை சேர்ந்த 3 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி தனித்தனி மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

இதன்பின்னர் நேற்று மாலை இக்கோவில் மலை பூசாரி அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டிருந்த அனைத்து பானைகளில் இருந்தும் சூடான பொங்கலை கையில் அள்ளி எடுத்தார். இதுபோல் 3 ஆயிரம் பொங்கல் பானைகளில் எடுக்கப்பட்ட பொங்கல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள வைரபெருமாளுக்கு படைக்கப்பட்டது.

இதில் இச்சமுதாயத்தை சேர்ந்த திரளானோர் தங்களது உறவினர்களுடன் கலந்துகொண்டனர். இதில் பலர் மலைமேல் உள்ள ரெத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் தரகம்பட்டி மந்தையைச் சேர்ந்த 24 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சார்பில் ரெத்தினகிரீசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பொங்கல் விழாவிற்கான ஏற்பாட்டினை ஊர் முக்கியஸ்தர்கள், ஊர்கவுண்டர் மாரியப்பன், நாட்டாண்மை பெரியசாமிபிள்ளை மற்றும் 24 ஊர் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com