பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
Published on

திருவண்ணாமலை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று போகிப்பண்டிகை திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டது. பழையன கழிந்து புதியன சேர வேண்டும் என நினைத்து பலர் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியே கொண்டு வந்து தீயிட்டு எரித்தனர்.

நாளை (புதன்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை சிறப்பிப்பார்கள். எனவே, மாட்டுக்கு தேவையான மூக்கனாங் கயிறு பல்வேறு வண்ணங்களிலும், பல்வேறு அளவில் மணிகள் போன்ற பொருட்களும் திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் விற்கப்பட்டது. மாடுகளை வளர்ப்பவர்கள் பலர் ஆர்வமுடன் அதனை வாங்கிச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து உறவினர்களை சந்தித்து அன்பு பகிரும் நாளாக காணும் பொங்கல் 17-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை நகர வீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் முளைத்தன. பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் கரும்பு, பானை, மஞ்சள் செடி, கோலப்பொடி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றின் விற்பனை களை கட்டியது. மக்கள் பலர் கடை வீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். ஒரு கரும்பு ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.

நகரின் முக்கிய இடங்களில் சிறு, சிறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டிருந்தன. சில இடங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது.

நகரில் சில இடங்களில் மத்தலாங்குளத் தெரு, திருவூடல் தெரு, சின்னகடை வீதி போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.

கண்ணமங்கலம் சந்தைமேடு பகுதியில் விற்பனைக்காக பானைகள் குவிக்கப்பட்டிருந்தன. அதனை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை களை கட்டியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com