பொங்கல் இலவச பொருட்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை நாராயணசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்க கவர்னர் முட்டுக்கட்டை போடுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
பொங்கல் இலவச பொருட்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியின் 134-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அமைச்சரும், புதுவை மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி கட்சிக் கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
இந்தியா சுதந்திரம் பெற்றபின் பிரதமரான நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்து வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை உருவாக்கினார் கள். சுதந்திரம்பெற்றபோது தொழிற்சாலைகள் இல்லை, கிராமங்களில் அடிப்படை வசதியில்லை, கல்விக் கூடங்கள், ஆஸ்பத்திரிகள் கிடையாது.

ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்து நவீன இந்தியாவை உருவாக்கிய பெருமை நேருவுக்கு உண்டு. ஆனால் இப்போது சிலர் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு நாட்டை முன்னேற்றி உள்ளோம் என்று பேசுகிறார்கள். கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 6.2 சதவீதம்தான் வளர்ச்சி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலாவணி கிடைத்தது. உலக அளவில் இந்தியா தலை நிமிர்ந்து நின்றது. முன்பு சில கட்சிகள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் முன்பு பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். சரக்கு மற்றும் சேவை வரியினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. பலர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சியை முடக்கி கேலிக்கூத்தாக்கிவிட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியை குறைசொல்ல தகுதியில்லை. மத்திய அரசும், புதுவை கவர்னரும் நெருக்கடி கொடுத்தும் புதுவை அரசு பல சாதனைகள் செய்து வருகிறது. நெட்டப்பாக்கம் காவல்நிலையம் இந்தியாவிலேயே 4-வது சிறந்த காவல்நிலையமாக தேர்வாகியுள்ளது. நமது மாநில அரசு பள்ளிகளும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கி பரிசுகளை பெற்றுள்ளது.

மக்களுக்கான திட்டங்களுக்காக கோப்புகளை அனுப்பினால் அதில் ஏதேதோ எழுதுகிறார்கள். பொங்கலுக்கு தமிழகத்தைப்போல் அனைவருக்கும் இலவச பொருட்கள் கொடுக்க அமைச்சர் கோப்பு அனுப்புகிறார். ஆனால் அதில் கவர்னர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுங்கள் என்கிறார். நிதி இருந்தும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.

பிரதமர் மோடி திட்டமிட்டு கிரண்பெடியை நமக்கு தொல்லை கொடுக்க அனுப்பி உள்ளார். இன்னும் 90 நாட்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார். அதன்பின் புதுவை மாநிலம் 2 மடங்கு வளர்ச்சி பெறும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், லட்சுமிநாராயணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நீல.கங்காதரன், பெத்தபெருமாள், ஏ.கே.டி.ஆறுமுகம், தனுசு, சாம்ராஜ் மற்றும் தொண்டர்கள் பலரும் 2 சக்கர வாகனங்களில் நகரப்பகுதியில் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com