நீரின்றி கடும் வறட்சி: வயல்களில் மாடுகளை மேய விட்டு நெற்பயிர்களை அழிக்கும் பரிதாப நிலை

மேலூர் பகுதியில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நீரின்றி கருகி வருவதால் அவற்றை மாடுகளுக்கு தீவனமாக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
நீரின்றி கடும் வறட்சி: வயல்களில் மாடுகளை மேய விட்டு நெற்பயிர்களை அழிக்கும் பரிதாப நிலை
Published on

மேலூர்,

பெரியாறு வைகை பாசனத்தின் ஒரு போக பாசனப் பகுதி மேலூர் ஆகும். இங்கு 16 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு பெரும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் மட்டமும் உயர்ந்தது. எனவே இந்த ஆண்டிலாவது எப்படியும் நெல் பயிரிட்டு மகசூல் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் மேலூர் பகுதியில் சில இடங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஆனால் அணையில் போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் மேலூர் பகுதி கால்வாயில் 7 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு கால்வாயில் திறக்கப்பட தண்ணீரும் எந்த ஒரு கண்மாய்க்கும் வந்து சேரவில்லை.

அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், தனியாமங்கலம், வெள்ளலூர், உறங்கான்பட்டி, கோட்டநத்தான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, ஒக்கபட்டி, தனியாமங்கலம், வெள்ளலூர், கொட்டகுடி, திருவாதவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு போய் உள்ளன.

கண்மாயில் தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் ரூபாய் செலவுகள் செய்து நெல் பயிரிட்ட விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அந்த நெற்பயிர்கள் எல்லாம் தற்போது வறட்சியில் கருக தொடங்கி விட்டன. இதனால் அந்த நெற் பயிர்கள் தங்களது மாடுகளுக்காவது தீவனமாக பயன்படட்டும் என்று தங்களது வயல்களில் மாடுகளை மேய விட்டு பயிர்களை அழித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கால்வாயில் தண்ணீர் வராது, எனவே இந்த ஆண்டு மேலூர் பகுதி விவசாயிகள் நெல் பயிரிட வேண்டாம் என அரசு அதிகாரிகள் முன்னதாகவே தெரிவித்திருந்தால் இந்த பாதிப்பில் இருந்து தப்பித்திருப்போம் என பாதிப்புக்குள்ளான விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com