ஏழை, எளிய மக்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும் தேர்தல் பிரசாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி

ஏழை, எளிய மக்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும் தேர்தல் பிரசாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி
Published on

சென்னை,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து செய்யூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தர்மத்தின் பக்கம் நிற்கின்ற கட்சிகள். தி.மு.க. கூட்டணி கட்சிகள் அதர்மத்தின் பக்கம் உள்ள கட்சிகள். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு எந்தவித நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

காவிரி பிரச்சினையில் தி.மு.க. தமிழகத்திற்கு சாதகமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.வும் இந்த பிரச்சினையை கண்டுகொள்ளவே இல்லை. எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றி கண்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. நல்லாட்சி நடைபெற அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுக்க தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதை கண்டுகொள்ளவில்லை. இனப்படுகொலை நடந்தபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொல்லி கபட நாடகம் ஆடினார். தி.மு.க.வும் காங்கிரசும் இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்தது.

தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மேல்மருவத்தூர் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com